Wednesday, 3 July 2013

ஆலயத் திருபனி

கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்றொரு புகழ் பெற்ற வாசகம் உண்டு. வாழ்வில் கலக்கமுறும் நிலை என்பதே மோசமானது. அதில் கடன்பட்டுவிட்டு, அடைக்காத நிலையைப் போல மோசமான, வேதனையான விஷயம் எதுவும் இல்லை.

வாழ்க்கையில், இப்பிறவியில் எத்தனையோ கடன்கள் இருக்கின்றன. பெற்றவர்களுக்கும் உடன் பிறந்தவர்களுக்கும் செய்யவேண்டிய கடமைகள் பல உண்டு. மனைவிக்கும் மக்களுக்கும் ஆற்றவேண்டிய கடமைகளும் இருக்கின்றன. நம்மைச் சுற்றியுள்ள சமூகத்துக்கும் இந்த உலகுக்கும் செய்யவேண்டிய கடன்கள் நம் ஒவ்வொருவருக்கும் இருப்பதை நாம் மறந்துவிடக்கூடாது. முக்கியமாக, உயிரும் உடலுமாகப் பிறப்பெடுத்த இந்த மனிதப் பிறவி என்பதே ஒரு கடன்தான்! அந்தப் பிறவிக்கடனைத் தீர்ப்பதில்தான் நம் பிறவியே முழுமை பெறுகிறது.

இப்படியாக, வாழ்வில் எத்தனையோ விஷயங்களில் கடன்பட்டிருக்கிறோம். கடனை அடைக்கமுடியாமலோ, கடனை அடைப்பதற்கு மறந்தோ, பல இன்னல்களிலும் குழப்பத்திலுமாகச் சிக்கித் தவிக்கிறோம். 'என்ன செய்வது, எப்படி மீள்வது என்று தெரியவில்லையே...’ எனப் புலம்புகிறோம்.

ஏழு அந்தணர்களைக் கொன்ற கடனை அடைக்க வழி தெரியாமல் அந்த முருகப்பெருமானே தவித்தபோது நாமெல்லாம் எம்மாத்திரம்?

போதவான், புத்திராண்டன், புருகூதன், போதன், பாண்டுரங்கன், வாமன் மற்றும் சோமன் என அந்த ஏழு அந்தணர்கள், ஆற்றங்கரையோரத்தில் இருந்த ஏழு குன்றுகளில் அமர்ந்து, கடும் தவம் புரிந்தனர். ஆனால், கந்தவேளின் வேல் சீறிப் பாய்ந்து வந்து, அந்த ஏழு அந்தணர்களின் தலைகளையும் கொய்தது. 'அடடா... எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டேன்’ என வருந்தினார் முருகப்பெருமான்.

'ஏழு தலங்களுக்குச் சென்று வணங்கினால் பாப விமோசனம் கிட்டும்’ என்பதை உணர்ந்த முருகப்பெருமான், காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், தென் மகாதேவநல்லூர், ஒலத்தூர், பூண்டி, குருவிமலை என ஏழு தலங்களுக்கும் சென்று சிவனாரைத் தொழுதார். சேய் முருகப்பெருமான் உண்டு பண்ணிய ஆறு எனப் போற்றப்படும் செய்யாற்றங்கரையில் அவர் வணங்கி வழிபட்ட தலங்கள் இன்றைக்கும் உள்ளன.

ஏழு தலங்களில் வழிபட்டுவிட்டு, சரக்கொன்றையும் வில்வமும் பூத்துக் குலுங்கும் வனத்துக்கு வந்தவர், 'தெரியாமல் செய்த பிழையை, பாவத்தை மன்னித்து அருளுங்கள் ஸ்வாமி’ என தந்தைசிவனாரிடம் மன்னிப்பு வேண்டிக் கதறினார். அங்கே, அவரின் பாவத்துக்கு விமோசனம் கிடைத்தது. அதனால் அந்தத் தலத்து இறைவனுக்கு பாப ருண ஹரேஸ்வரர் என்றும் ருணஹரேஸ்வரர் என்றும் திருநாமம் அமைந்தது. அதேபோல், இங்கே உள்ள ஸ்ரீவிநாயகரை வணங்கிவிட்டு, சிவ வழிபாடு செய்தார் கந்தக் கடவுள். எனவே, இங்குள்ள விநாயகப்பெருமானுக்கு சங்கடஹர விநாயகர் எனும் திருநாமம் அமைந்ததாம்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூருக்கு அருகில் உள்ளது பெரணம் பாக்கம். இந்த ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீருணஹரேஸ்வரர் திருக்கோயில்.

புராதனமான ஆலயம். சோழ மன்னர்களால் கட்டப்பட்ட கோயில். சதுர்வேதமங்கலம், சதுர்வேதிப்பாக்கம் என்றெல்லாம் ஊரின் பெயர் இருந்திருக்கிறது. இங்கே கோயிலை அமைத்து அந்தணர்களைக் குடியமர்த்தி, தினமும் வேதபாராயணம் ஒலித்துக்கொண்டே இருந்ததாம். அதனால் இந்த ஊருக்கு 'பிராமணப்பாக்கம்’ என்று பெயர் அமைய, பிறகு அதுவே பெரணம்பாக்கம் என மருவியதாகச் சொல்வர்.

விஜயநகரப் பேரரசர்கள் காலத்தில், கந்ததேவ மகாராஜா ஆட்சியில், தேவதான கிராமங்கள் எனப் பட்டியலிட்டு, அங்கே உள்ள கோயில்களில் விளக்கெரிக்கவும் பூஜைகள் நடந்தேறவும் நிவந்தங்கள் அளித்திருக்கிறார் மன்னர். அதில் இந்தக் கோயிலும் ஒன்று.

சம்புவராயர் ஆட்சியின்போது, இந்தக் கோயிலின் நிர்வாகப் பணிகளுக்காகவும் பூஜைகளுக்காகவும் ஐம்பத்து எட்டு வேலி புஞ்சை நிலங்களைத் தானமாக வழங்கியிருக்கிறார். பல்லவர்களின் ஆட்சிக்காலத்தில் இந்தக் கோயில் இன்னும் விரிவுபடுத்தப்பட்டு, இரண்டு முறை கோயிலில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறது.

ருணஹரதீர்த்தம், பிரம்மதீர்த்தம் என இங்கே இரண்டு தீர்த்தங்கள். சரக்கொன்றை, வில்வம் என இரண்டு ஸ்தல விருட்சங்கள். இரண்டு பிராகாரங்களைக் கொண்ட அழகிய கோயில் இது. நம் வாழ்வின் அத்தனைக் கடன்களையும் நிவர்த்தி செய்பவராக ஸ்ரீருணஹரேஸ்வரரும், அனைத்து மங்கல காரியங்களையும் நிகழ்த்தித் தருபவளாக ஸ்ரீமங்களாம்பிகையும் காட்சி தருகின்றனர்.

அகத்திய முனிவருக்கும் மிருகண்ட மகரிஷிக் கும் சிவனார் ஸ்ரீஉமையவள் சமேதராக, ரிஷபா ரூடராக திருக்காட்சி தந்த திருத்தலம் இது. ஒரு மனிதனின் சாதாரணக் கடனில் துவங்கி பிறவிக் கடன் வரை அத்தனையையும் நிவர்த்தி செய்து, நமக்கு அருள்பாலிக்கும் சிவனார் குடிகொண்டி ருக்கும் கோயில். ஆனால் என்ன... சுமார் நூறு வருடங்களுக்கும் மேலாக, சிதிலம் அடைந்து, வழிபாடுகளும் இல்லாமல், சிதைந்தும் இடிந்தும் கிடப்பதுதான் கொடுமை.

இங்கே... ஸ்ரீருணஹரேஸ்வரரின் ஆலயத் திருப்பணிக்கு ஒரேயரு செங்கல் தந்தால் கூட, அது வட்டியும் முதலுமாக நமக்கே திரும்பி வந்து, நம் கடன்களை அடைத்து, வளத்தைத்  தரும். நம்மை இனிதே வாழ வைக்கும்!

முன் மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபமெல்லாம் கட்டவேண்டும் எனத் திட்டம் வைத்துள்ளது திருப்பணிக் கமிட்டி. அந்த மண்டபத் திருப்பணியில், நம்மால் முடிந்த அளவு ஏதேனும் ஒரு பங்களித்து, கைங்கர்யத்தில் ஈடுபட்டால், நமது இந்த ஜென்மத்துப் பாவங்களை மட்டுமின்றி, ஏழேழு ஜென்மத்துப் பாவங்களையும் போக்கி அருள்வார் ஸ்ரீருணஹரேஸ்வரர்.

''ஒருகாலத்துல, இந்த ஊர்ல எப்பவும் வேத கோஷங்கள் முழங்கிக்கிட்டே இருக்கும். கோயில்ல விழாக்களும் கொண்டாட்டங்களும் எப்பவும் இருந்துக்கிட்டே இருக்கும். திருவண்ணா மலை மாவட்டத்தின் பல ஊர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கே வந்து வழிபட்டுப் போறதை வழக்கமா வைச்சிருந் தாங்க. ஆனா இன்னிக்கி, வேத கோஷங்களும் இல்லை; வீதியுலாக்களும் கிடையாது. கொண் டாட்டங்களும் கோலாகலங்களும் இல்லாம, சிதிலம் அடைஞ்சு நிக்கிற கோயிலைப் பார்க்கவே வேதனையா இருக்கு'' என்று கண்ணீருடன் புலம்புகின்றனர் ஊர்மக்கள்.

முருகக்கடவுள் வழிபட்ட தலத்து இறைவ னின் ஆலயத் திருப்பணியில் நாமும் நம் பங்கைச் செலுத்துவோம். அகத்தியருக்கும் மிருகண்ட மகரிஷிக்கும் திருக்காட்சி தந்த ஈசனின் தலத்துக்கு நம்மால் இயன்றதைச் செய்வோம். அது நம் சந்ததியையும் செழிக்கச் செய்யும் என்பது உறுதி!

பெரணம்பாக்கம் கடன் தீர்க்கும் சிவனாரின் கோயிலில் திருப்பணிகள் விரைவில் நடந்து, சீக்கிரமே கும்பாபிஷேகம் காணட்டும். அந்தத் திருப்பணிக்கு உதவுவதும் பங்கேற்பதும் நம் ஒவ்வொருவரின் கடன்; அதாவது கடமை!

கடமையைச் செய்வோம்; தென்னாடு டைய சிவனார் அதற்கான பலனை நிச்சயம் தந்தருள்வார்!


நன்றி சக்தி விகடன்


No comments:

Post a Comment